தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர். இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன்படி கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். இருவரும் கரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (17.03.2021) கரூர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டவுடன் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்’ என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார்.
இதனால், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், கடந்த 18ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். தற்போது அதன் அடிப்படையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது, பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கலகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், பொது ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.