Skip to main content

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் செக் வைக்கும் தி.மு.க... அதிருப்தியில் ஓ.பி.எஸ். தரப்பினர்!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

admk


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. அரசின் முதலமைச்சராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு முன்னதாக, சசிகலா குடும்பத்தை எதிர்த்து முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நிலையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசகர்ராவ். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி,  சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
 


ஆனால் எடப்பாடி பழனிசாமி கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அ.தி.மு.க. கொறடாவின் உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். மேலும் கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 பேர் மீது தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்தது தி.மு.க.. ஆனால், அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிகாத்தார் சபாநாயகர். இதையடுத்து தி.மு.க. தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அப்போது, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைப்பதாகத் தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். 
 

 


இந்த நிலையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறி மூன்று மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தி.மு.க. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு அளித்துள்ளது. அதில் மணிப்பூரில் 2017இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். அதனையடுத்து மணிப்பூர் சட்டமன்றத்தில் தகுதிநீக்க பிரச்சினையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படாததையும் தி.மு.க. சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சபாநாயகர் முடிவெடுக்காத நிலையில் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என தி.மு.க. கோரியுள்ளது. ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. வழக்கை தி.மு.க. மீண்டும் கையில் எடுத்திருப்பதால் ஓ.பி.எஸ். தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்