Skip to main content

மாநகராட்சி மேயர் தேர்தல் ! தேதி அறிவிக்க எடப்பாடி ஆலோசனை !

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

ஊரக உள்ளாட்சிகளுக்கான நேரடி தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுகவை, மறைமுக தேர்தலில் தோற்கடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலை விரைந்து நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

 

ops and eps plan for tamilnadu corporation election

 

 

மூன்று வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என எடப்பாடிக்கு நம்பிக்கைக் கொடுத்தவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி. அதன்படி ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது ஆளும் அதிமுக அரசு ! இந்த நிலையில், மேயர் தேர்தலை நடத்துவது குறித்து அமைச்சர் வேலுமணியிடம் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்எடப்பாடி பழனிச்சாமி.

மிக ரகசியமாக நடந்த அந்த ஆலோசனை குறித்து விசாரித்த போது, ‘’ உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஊராட்சிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், மாநகராட்சிகள் என மூன்று பகுதிகளாக நடத்த திட்டமிட்டார் வேலுமணி. அதனை எடப்பாடி, ஓபிஎஸ் உள்பட சீனியர் அமைச்சர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஊராட்சிகளில் கிடைக்கும் ரிசல்ட்டின் படி நகராட்சிகளுக்கும், நகராட்சிகளில் கிடைக்கும் ரிசல்ட்டின்படி மாநகராட்சிகளுக்கும் தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது என்பதுதான் திட்டம். அந்த வகையில், நகராட்சி தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்திலும், மாநகராட்சிக்கான மேயர் தேர்தலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் நடத்த தீர்மானித்திருந்தனர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதாவது, பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்துக்குமான தேர்தலை இணைத்து ஒரே பகுதியாக நடத்திடலாம் என எடப்பாடியும் வேலுமணியும் முடிவெடுத்துள்ளனர். மறைமுக தேர்தலில் திமுகவை வீழ்த்தியதன் மூலம் கிடைத்த நம்பிக்கைதான் இதற்கு காரணம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நடக்கும் குழப்பத்தை எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வருகிறார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழட்டி விடப்படும் அல்லது காங்கிரசே வெளியேறும் சூழலை திமுக ஏற்படுத்தும். இதில் எது நடந்தாலும் அது அதிமுகவுக்கு லாபம்தான் என கணக்குப் போட்டுள்ளனர். அதேசமயம், திமுக கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொண்டு கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும் அதுவும் தங்களுக்கு நன்மையைத்தான் கொடுக்கும் எனவும் யோசித்துள்ளனர்.

அந்த வகையில், மறைமுகத் தேர்தலில் அதிமுக எடுத்த பல வியூகங்கள் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதனால், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி தேர்தலோடு மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் தேர்தலையும் உடனடியாக நடத்திடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப, பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்காமல் இருப்பவர்களின் வீடு தேடி கொண்டுபோய் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அதற்கு வசதியாகத்தான் பொங்கல் பரிசு வழங்கும் காலத்தை நீட்டித்துள்ளனர். பொங்கல் பரிசு அனைவருக்கும்
கொடுத்து முடித்ததும் தேர்தல் தேதி அறிவிக்கக்கூடும். 

அநேகமாக, வருகிற 27-ந்தேதி இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவரலாம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு (தேர்வு காலக்கட்டம் என்பதால்) கலந்துப் பேசி, தேர்தல் தேதியை முடிவு செய்யவும் ஆலோசனை நடந்துள்ளது ‘’ என்று விவரிக்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமான அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்