குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தூத்துக்குடி செல்லவேண்டும் என குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்காதவண்ணம் ம.த.ஜ. கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்தது. பல்வேறு அரசியல் களேபரங்களுக்குப் பிறகு, கர்நாடகாவின் 24ஆவது முதலமைச்சராக குமாரசாமி நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்றுக்கொள்கைகளைக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த ஒருங்கிணைப்பு மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அடுத்த தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, ‘இன்று குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்’ என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இன்று குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்#Sterlite pic.twitter.com/sNsL7tRpaN
— Jignesh Mevani (@jigneshmevani80) May 23, 2018
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை வாய்திறக்கவில்லை. அவரது இந்த மவுனம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஜிக்னேஷ் மேவானியின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.