தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வாக்களிப்பதற்காக கட்சித்துண்டு, வேட்டியுடன் வாக்குச்சாவடிக்கு வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆனந்த் கட்சி அடையாளமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவும் வாக்களித்தார்.