ஓ.பி.எஸ் தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார். பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஓ.பி.எஸ், “நமது இயக்கம் நெஞ்சம் நிமிர்ந்து நிற்க காரணமான தொண்டர்களுக்கு வணக்கம். இது ஒரு சாதாரண இயக்கம் அல்ல; எம்.ஜி.ஆர் துவக்கிய இயக்கம்; எவராலும் அழிக்க முடியாத அற்புத சக்தி நம் இயக்கம். வீழ்வது நாம் ஆகினும் வளர்வது நம் இயக்கமாக இருக்கட்டும். இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை தொண்டர்களுக்கு மட்டுமே என்று எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதை ஜெயலலிதா பின்தொடர்ந்தார். இது தான் வரலாறு.
சமுதாயச் சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் பெரியார். தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பட்ட இயக்கம்; ஒரு கட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டது என்றால் அது நம் கழகம் மட்டும் தான். 30 ஆண்டுகளாக எத்தனையோ பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் வென்றார்கள் நம் அம்மா. பன்னீர்செல்வத்தை தொண்டனாகப் பெற்றது என் பாக்கியம் என்றார் அவர். நிதி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பொருளாளர் என பல பதவிகள் கொடுத்தார் அம்மா. 2 கோடியாக இருந்த கட்சி நிதி 250 கோடியாக மாறியது.
இன்று ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிக்கொண்டுள்ளனர். கட்சியின் நிதியை முறையாகச் செலவு செய்யாதவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரப்படும். ஐயா பழனிசாமி அவர்களே, உங்களுக்கு யார் பதவி கொடுத்தார்கள்? சின்னம்மா முதல்வர் பதவியைக் கொடுத்தார்கள். நாம் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய துரோகி நீங்கள். வரலாறு உங்களை மன்னிக்குமா? தனக்குத் தானே பொதுச்செயலாளர் என்று பதவி கொடுத்துக் கொண்டு... ஐயோ..! எம்.ஜி.ஆரின் தொப்பியை போட்டுக்கொண்டு போஸ் கொடுக்கிறீங்களே... நீங்களும் புரட்சித்தலைவரும் ஒன்றா? அவரது கால் தூசிக்கு நீங்கள் ஆக மாட்டீங்க.. என்ன திமிரு உங்களுக்கு.. கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு நிர்வாகிகளை வாங்கியுள்ளீர்கள். (இங்கு ஓ.பி.எஸ் ஒருமையில் பேசினார். நாகரீகம் கருதி அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது).
அப்படிப்பட்ட இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகியை கட்சியில் இருக்கவிடலாமா? தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டாயிரம் கேடிகள், ரவுடிகளை மண்டபத்தில் கொண்டு வந்து விட்டு நீங்கள் நடத்தியது பொதுக்குழுவா? வரவு செலவை நான் வாசிக்க ஆரம்பித்த போது சி.வி.சண்முகம்.. ஒரு லூசு.. எல்லாவற்றையும் ரத்து செய்யுங்க என்றார். 9 பேர் கொண்ட தலைமை கழகம் தான் நான் வாசித்ததை உருவாக்கினர். சி.வி.சண்முகம்... பணத்திமிரு அவ்வளவும்.
ஜெயக்குமார்... அவர் ஒரு லூசு.. என்னை தனியாக டீ ஆத்துகிறார் என்கிறார். இன்று பார்த்தீங்களா கூட்டத்தை! இது 33 மாவட்டம் தான். இன்னும் 55 மாவட்டம் இருக்கு தம்பி. தொண்டர்கள் கூடுகின்ற மாநாடு இது போல் நடக்கும். திருச்சியில் ஒரு குறை இருக்கு... கடல் இல்லை. ஆனால், அதையும் நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள். அம்மா இங்கு கூட்டம் நடத்தித் தான் முதல்வராக ஆனார். நாம் நடத்துகிறது தர்மயுத்தம். தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்மயுத்தம். உங்களின் வலிமையோடு திருச்சி மாநகரில் விதையை உருவாக்கி உள்ளோம். இது பூ பூத்து... காய் காய்த்து... மீண்டும் தொண்டர்களிடமே கொடுக்க வேண்டும். எடப்பாடி ஜமீன்தார்கள், பணக்காரர்கள் தலைமைக்கு வர வேண்டும் என்று சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார்.
சட்ட விதியை திருத்திய எடப்பாடிக்கு சாவு மணி அடித்தே தீர வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த தர்மயுத்தத்தை துவக்கி உள்ளோம். நம் மீது தண்ணீர் பாட்டில் அடித்தவர்கள்; இவர்களுக்கு எல்லாம் பதில் கொடுப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். சகோதர பாச உணர்வோடு அம்மாவும் எம்.ஜி.ஆரும் வளர்த்தது போல் வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எடப்பாடியின் கம்பெனியில் நம் இயக்கம் இருக்கக் கூடாது. அதனை நாம் மீட்க வேண்டும்” என்றார்.