அதிமுக கட்சித் தொண்டர்களிடம் சசிகலா பேசும் ஆடியோ பேச்சுக்கள் வெளியாகி பரபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோவில், விரைவில் அனைவரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கும் சசிகலா, “கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நான் நிச்சயம் வருவேன். தைரியமாக இருங்கள்” என்று சொல்லியிருப்பது அதிமுகவில் அதிர்ச்சியையும் அமமுக தரப்பில் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் துணை ஒருங்ணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ.! இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “அதிமுக கட்சியில் சசிகலா இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எவ்விதச் சம்மந்தமும் கிடையாது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்துக்களைச் சொல்லிவருகிறார். அதிமுக என்கிற பேரியக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் பாதுகாத்துவருகிறார்கள்.
இதனால், அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவின் கருத்துக்கு செவிசாய்க்க மாட்டார்கள். அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் பேசவில்லை. சசிகலாதான் ஃபோன் போட்டுப் பேசுகிறார். குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது. அவருடன் இருக்கும் சிலர் அவரைத் தூண்டிவிடுகின்றனர். அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் சசிகலா அமைதியாக இருக்க வேண்டும்” என்கிறார் கே.பி. முனுசாமி.