Skip to main content

கோவையில் ஒரு கோயம்பேடு! ஆசியாவிலேயே பிரமாண்டமான பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடி திட்டம்! 

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

 


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவை மாவட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! 
 

மக்கள் தொகை அதிகம் உள்ள கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் வாகணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முந்தைய சட்டசபையில் விதி எண் 110- ன் கீழ் அறிவித்திருந்தார் எடப்பாடி.

 

 Coimbatore


 

இந்நிலையில், அதனை செயல்படுத்த 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தை உருவாக்க நிதி ஒதுக்கி எடப்பாடி அரசு, தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. 
 

"சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையம் போல் மிகப்பிரமாண்டமாக அமையவுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 140 பேருந்துகளை நிறுத்த முடியும். புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டால் கோவையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்" என்கிறார்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள். இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிதாக அமைய உள்ளது. 61 ஏக்கர்  நிலப்பரப்பளவில்  பேருந்து நிலையத்தை அமைக்க  முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


 

ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளும், உள்ளூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.  தவிர, கோவை நகரில் திட்டமிடப்பட்டிருக்கும்  மெட்ரோ ரயில் சேவையும், இந்த பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படவுள்ளன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்துக்குள் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பது போல, கோவையிலும் அமைக்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  


 

ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்துக்குள், பணிமனை, போக்குவரத்து ஊழியர்கள் தங்குமிடம், பயணிகள் ஒய்வு அறைகள், கடைகள், வாடகை ஊர்திகளுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நவீனமாக அமைய உள்ளது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை முழுவதும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரும் கோவை மாவட்ட அமைச்சருமான  எஸ்.பி.வேலுமணியுடன் நீண்ட ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

சார்ந்த செய்திகள்