வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா ஓபிஎஸ்ஸின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பானது நடைபெற்றுள்ளது. சசிகலாவைச் சந்தித்ததற்காக ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.