ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு உரிய விசாரணை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பால் முகவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகம் கரோனா நோய்த் தொற்று பேரிடர் காலமான தற்போது நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இந்த கரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிறுவனம் 28% வளர்ச்சியோடு இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் குஜராத்தின் அமுல் நிறுவனம் முதலிடத்திலும், கர்நாடகாவின் நந்தினி பால் இரண்டாவது இடத்தில் அதுவும் பால் விற்பனையில் நாளொன்றுக்கு அறுபது இலட்சம் லிட்டரும், தயிர் விற்பனையில் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் லிட்டரும் என்று வெண்மைப்புரட்சியில் புரட்சி செய்துள்ளது என்பதே உண்மை. மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் போது விற்பனையில் வெறும் 25 லட்சம் லிட்டர் என்கிற இலக்கை நீண்ட காலமாக தாண்டாமல் இருக்கும் ஆவின் நிறுவனம் தினசரி 40லட்சம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்துவிட்டு அதனை வளர்ச்சியாக மெச்சிக் கொள்வது சுய தம்பட்டம் மட்டுமல்ல ஆவினில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் மறைக்கும் முயற்சியாகும்.
ஆனால் தற்போது ஊரடங்கு ஐந்தாவது மாதமாக அமலில் இருக்கும் சூழலில் நுகர்வோர் பயன்பாட்டில் ஆவின் பால் விற்பனை என்பது அபாரமாக ஒன்றும் உயரவில்லை. அதே நேரம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலினையே கொள்முதல் செய்ய மறுத்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இன்றளவும் பால் உற்பத்தியாளர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
இதிலிருந்து ஆவின் நிர்வாகம் தரப்பில் கொள்முதல் செய்வதாகச் சொல்லப்படும் தகவல் பொய் என்பதும், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் பால் கொள்முதல் செய்து ஆவினுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
ஆவின் இணையம், ஒன்றியங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை, ஆலசோகர்கள் (Consultant) என்ற பெயரில் நியமித்து நடக்கும் இமாலயத் தவறுகள் இன்றும் தொடர்கதையாகி தொடர்கிறது என்பதே நிதர்சனம்.
ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.