மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மலைவாழ் மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும், பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையின்போது கூறினார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019), கருமந்துறையில் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக அவர் அங்குள்ள வெற்றி விநாயகர் கோயிலில் வழிபட்டார்.
கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீஷ் மற்றும் சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், அமைச்சர் சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் சித்ரா, வெங்கடாஜலம், தேமுதிக நிர்வாகி இளங்கோவன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோரும் அந்த கோயிலில் வழிபட்டனர். இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதி மக்களிடம் நடந்து சென்று எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.
பின்னர் திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசியதாவது:
இந்தியா பாதுகாப்பாக இருக்க, மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். கடந்த 16 ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுக, மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செய்ய தவறிவிட்டது. பாஜகவை மதவாத கட்சி என்று விமர்சித்து வரும் திமுக, கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அக்கட்சியுடன்தான் கூட்டணி வைத்து இருந்தது. அப்போது மதவாத கட்சியாக தெரியவில்லையா? இப்போது அதிமுக, அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மதவாத கட்சி என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது திமுக.
மத்தியில் ஒரு ஆட்சியும் மாநிலத்தில் வேறு ஒரு ஆட்சியும் நடந்தால் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியாது. நூறு கோடி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்களின் நலன் கருதி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருள்களும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற முயற்சி செய்த கட்சிதான் திமுக. மக்களுக்கு பயன்தரும் திட்டத்தை செயல்படுத்தினாலும் அதை முறியடிக்க நினைக்கும் கட்சியாக திமுக இருக்கிறது.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த உடனே உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் வழக்கு தொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவக்கூடிய செயல் திட்டங்களை திமுக தொடர்ந்து முறியடிக்கிறது. கட்சி பாகுபாடின்றி 2 கோடி மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கம்தான் அதிமுக அரசுக்கு உள்ளது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே சட்டசபையில் 110-வது விதியின் கீழ் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவாசல் அருகே, 900 ஏக்கரில் 396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும். இதில் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
அதிமுக ஆட்சி செய்வதைப்போல திமுக ஒருபோதும் செய்யாது. பொய் வாக்குறுதிகளை கூறிவிட்டு செயல்படுத்த முடியாத ஆட்சியாக திமுக இருக்கும். கடந்த மாதம் இந்தியாவையே உலுக்கிய 40 ராணுவ வீரர்கள் படுகொலை சம்பவம், அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. விமான போரின்போது எதிரிகளின் பிடியில் இந்திய விமானி பிடிபட்டபோது ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக பேசி, பெருமையைத் தேடித்தந்தார் மோடி. விமானப்படை மூலம் குண்டுகள் வீசி எதிரிகளை தாக்கிய பெருமையும் பிரதமருக்கு உண்டு. 130 கோடி மக்களின் பாதுகாப்பை காக்க மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய வேண்டும்.
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட மாட்டாது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.