போராட்டம் என்றாலே உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை என்பது மட்டுமல்ல இப்படியும் போராட்ட வடிவத்தை செய்யலாம் என்பதை இன்று சுவராசியமாக செய்திருக்கிறார்கள் நாமக்கல் மாவட்ட திமுகவினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அமைச்சர் தங்கமணியின் தொகுதியாகும். இந்த குமாரபாளையத்தில் விசைத்தறிகள் அதிகம் உள்ளது. சுமார் 1 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இங்கு உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நகராட்சி சார்பில் புதைவட மின் கேபிள்கள் கொண்டுசெல்ல ஒவ்வொரு தெருவிலும் பெரிய பெரிய குழிகள் அமைத்துள்ளார்கள்.
இந்த புதைவட குழிகள் பல தெருக்களில் மூடப்படாமலும் அப்படி மூடியுள்ள இடங்களிலும் மண் புழுதி குமாரபாளையம் நகரை சுற்றி வீசிக்கொண்டிருக்கிறது. இதை சரிசெய்து சாலை அமைத்து மக்களுக்கு கொடுக்கவேண்டும் என பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும் அமைச்சர் தங்கமணியிடமும் மனு கொடுத்துப் பார்த்தனர் பல்வேறு அமைப்பினரும். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. வாகன ஓட்டிகள் குண்டும் குழியில் வண்டியை செலுத்தி கீழே விழுந்து அந்த மண் புழுதியில் பயணம் செய்யும் அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் இந்த மண் புழுதியால் நோய்நொடிகள் வராமல் இருக்க ஒரு புதிய உத்தியை கையாண்டனர் குமாரபாளையம் நகர திமுகவினர். அதன்படி இன்று காலை திமுக நகர செயலாளர் சேகர் தலைமையில் களம் இறங்கிய திமுகவினர், வாகன ஓட்டிகளுக்கு மாஸ்க் கொடுக்கத் தொடங்கினார்கள். மேலும் அந்த மாஸ்க்கை வாகனம் ஒட்டி வருபவர்களுக்கு அவர்களே கட்டிவிட்டனர்.
இது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவும் ஒரு போராட்ட வடிவமாகத் தான் தெரிகிறது இப்படி மக்கள் மனம் கவரும் போராட்டங்களை எடுத்தால் மக்களிடம் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை தக்க வைக்கலாம் என்கின்றனர் குமாரபாளையம் மக்கள்.