தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுழற்சி முறையில் பட்டியலினப் பெண்களுக்கு இந்த ஊராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அந்தக் கிராமத்தினர் கருப்புக்கொடி காட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பான்மையான ஓட்டுகள் பொதுப்பிரிவினருக்கு உள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பிய அந்தக் கிராம மக்கள், தேர்தலைப் புறக்கணித்தனர்.
பஞ்சாயத்து தலைவர் தேர்தல் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல்களில் கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவோ போட்டியிடவோ முன்வரவில்லை. இதனால், பட்டியல் இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி ஆகிய இருவர் மட்டும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் 13 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில், 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், வார்டு உறுப்பினர்களின் பதவியிடங்கள் காலியாகவே இருந்துவந்தன. இதனால் கிராம வளர்ச்சிப் பணிகள் சுணங்கிக் கிடந்தன. இந்நிலையில், காலியாக இருந்த 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதில், 1வது வார்டுக்கு வைகுண்டசெல்வி, 2வது வார்டுக்கு கேசவன், 3வது வார்டுக்கு நடராஜன், 4வது வார்டுக்கு சுஜாதா, 5வது வார்டுக்கு யாக்கோபு, 6வது வார்டுக்கு பரிமளச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றனர். இதில், பரிமளச்செல்வியின் மகன் இறந்துபோனதால், பரிமளச்செல்வி மட்டும் பதவியேற்கவில்லை. இதற்கிடையே, பிச்சிவிளை ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (22.10.2021) நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, திருச்செந்தூர் ஒன்றிய ஆணையாளர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இதையொட்டி, காலை 10 மணியளவில் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த வார்டு உறுப்பினர்கள் வைகுண்டசெல்வி, கேசவன், நடராஜன், சுஜாதா, யாக்கோபு ஆகிய 5 பேரும், திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சித் தலைவரிடம் வழங்கினர். பின்னர், அங்கிருந்து வேகமாக வெளியேறினர். இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, “எங்களுக்கு பதவியில் தொடர்வதற்கு விருப்பம் இல்லை. எங்களது ஊராட்சியில் மொத்தம் உள்ள 827 வாக்குகளில், 6 வாக்குகளே பட்டியல் இனத்தவருக்கு உள்ளது. குறைந்தது 50 வாக்குகளுக்கு மேல் இருந்திருந்தால், தலைவர் பதவியைப் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். எனவே, ஊர்மக்கள் முடிவுபடி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம்” என்றனர்.
இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, “துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புத்தகத்தில் தீர்மானமாக கொண்டுவந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும்” எனத் தெரிவித்தனர். பட்டியலினப் பெண் ஊராட்சி தலைவரை எதிர்த்து வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.