Skip to main content

திமுகவில் மீண்டும் அழகிரி? - உதயநிதி உடனான சந்திப்பிற்கு பின் நடந்த நிகழ்வு

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Now the question has arisen whether Alagiri will join the DMK again

 

மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

 

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதையடுத்து தீடீரென அழகிரி வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் அழகிரிக்கு பொன்னாடை போர்த்தினார். வெளியே வந்து வரவேற்ற அழகிரி, காந்தி அழகிரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே வெகுநேரம் பேசிக்கொண்டனர்.

 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் துவக்கி வைப்பதற்காக மதுரைக்கு வந்தேன். மதுரையில் பெரியப்பா அழகிரியைச் சந்தித்து அவரது ஆசியைப் பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். அவரும் என்னை வாழ்த்தியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

கட்சி குறித்து பேசினீர்களா என்று உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.அழகிரி உடனடியாக, “நான் கட்சியில் இல்லை என்பது தெரிந்தும் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா? என் தம்பி மகன் என்ற முறையில் ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளார். அன்பில் மகேஷும் என் பிள்ளைதான். இருவரையும் வாழ்த்தியது எல்லை இல்லாத மகிழ்ச்சியாக உள்ளது. என் தம்பி முதலமைச்சராக உள்ளார். இவர் அமைச்சராக உள்ளார். அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது.” எனக் கூறினார். 

 

மு.க.அழகிரியிடம் திமுகவில் மீண்டும் உங்களை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, “அதை அவர்களைத்தான் கேட்க வேண்டும்.” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்