ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று பிரிந்த போது ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக சென்றவர் முன்னாள் ராஜ்யசபா எம்.பியான மைத்ரேயன். மாநிலங்களவையில் 24.07.2019 அன்று 5 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடையும் நிலையில், அதிமுக சார்பாக மாநிலங்கவை உறுப்பினராக இருந்த மைத்ரேயன் தனது கடைசி உரையை மாநிலங்களவையில் பேசும் போது, என் மேல் நம்பிக்கையும் , பாசமும் வைத்து என்னை மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாக அதிமுக சார்பாக தேர்வு செய்து அனுப்பியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தேன் என்றார்.
மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர் என்றாலும், பாஜகவின் தலைமையுடன் மிக நெருக்கமாக உள்ளவர். அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் இடையே நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருந்ததால் இரண்டு காட்சியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எம்.பியாக ஓய்வு பெற்ற பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை இரண்டு நிலைப்பாடுகளிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும், கட்சிக்கு ஒருவர் தலைமை, ஆட்சிக்கு ஒருவர் தலைமை என இரண்டும் ஒன்று சேர பயணிக்கும் போது இரட்டைத் தலைமையாக இருந்தால் கூட அது நல்ல முறையில் பயணிக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இவர் கூறிய கருத்தில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இருக்குமோ என்று எடப்பாடி தரப்பு கருதுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, ஆட்சிக்கு எடப்பாடியும், கட்சிக்கு ஓபிஎஸ் தலைமையும் இருக்க வேண்டும் என்ற பார்வையில் மைத்ரேயன் கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த கருத்துக்கு பின்னால் பாஜகவின் திட்டம் இருக்கும் என்று கூறுகின்றனர். ஆட்சி முடிந்தவுடன் கட்சிக்கு ஓபிஎஸ்ஸை தலைமை ஏற்க வைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.