தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 10- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் ஏக சிக்கல்களை எதிர்கொண்டதால் மார்ச் 10- ஆம் தேதி வெளியிட முடியவில்லை. சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இன்று (11/03/2021) காங்கிரசுக்கான 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே பாக்கி. அதுவும் இன்று இரவுக்குள் ஒதுக்கப்பட்டுவிடும். அதன்பிறகு திமுகவின் தொகுதிகளை அதற்கான வேட்பாளர் பட்டியலுடன் அறிவிக்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ஐ-பேக் கொடுத்த பட்டியலில் நம் பெயர் இருக்கும் நிலையில், அதனை அப்படியே ஏற்றுக்கொள்வாரா ஸ்டாலின்? அதைத்தான் அப்ரூவல் செய்வாரா? இல்லை மாற்றியமைப்பாரா? மாற்றியமைத்தால் நமக்கு வாய்ப்புக் கிடைக்குமா? என்றெல்லாம் தவித்தபடி இருந்தனர் தி.மு.க.வின் உடன்பிறப்புகள்.
அறிவாலயத்தின் தொடர்புகளிலும், கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களின் தொடர்புகளிலும் முயற்சித்துப் பார்த்தும் யாருக்குமே திமுகவின் வேட்பாளர் பட்டியலில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மிக சீகரெட்டாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட மிக மிக முக்கிய இரண்டாம் நிலை தலைவர்களிடம் உடன்பிறப்புகள் விசாரித்திருக்கிறார்கள்.
அவர்களோ ‘’எங்களுக்கு எதுவும் தெரியாது. பட்டியல் குறித்து எதுவும் எங்களிடம் தலைவர் (ஸ்டாலின்) விவாதிக்கவில்லை. பட்டியல் ரிலீஸ் ஆனால்தான் இரண்டாம் நிலை தலைவர்களுக்கே சீட் கிடைத்திருக்கிறதா? இல்லையான்னு தெரியவரும்‘’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால், பட்டியல் வரும்வரை பதட்டத்திலேயே இருந்தனர் உடன்பிறப்புகள்! எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு வேட்பாளர் பட்டியலை மிக சீக்ரெட்டாக தயாரித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.