வேலூரில் வரலாறு படைப்பார் கதிர் ஆனந்த் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜகவின் சூழ்ச்சி மற்றும் சதியால் கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 5ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு எடுத்த முடிவு, மறுதேர்தல் நடக்கும் வேலூர் தொகுதிக்கும் தொடர்கிறது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தே மீண்டும் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன் பரப்புரைப் பணியை தொகுதி முழுவதும் முன்னெடுத்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சிற்றூர் கிளை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். உத்வேகத்துடன் உழைத்துவரும் அவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது கட்சித் தலைமை.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூரில் வெற்றி பெறுவது நிச்சயம். அந்த வெற்றியை அனைவரும் இணைந்து சாத்தியமாக்குவோம் என்றே சூளுரைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.