இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் துரை வைகோ பேசுகையில், ''தமிழக ஆளுநரை பொறுத்தவரை அவர் தமிழக ஆளுநராக செயல்படாமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வாறு செயல்படுவது மட்டுமின்றி சனாதன சிந்தனைகளை வளர்க்க செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல முக்கியமான தீர்மானங்கள் ஒப்புதல் கொடுக்கப்படாமல் காத்திருக்கிறது. மக்களுக்கு தேவையான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்காமல் ஆளுநர் இந்த மாதிரி தமிழகம் என்று சொல்ல வேண்டும், திராவிடம் தமிழ்நாட்டை பாழ்படுத்துகிறது என சித்தாந்த ரீதியாக அரசியல் கட்சித் தலைவர்போல் பேசிக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆளுநர் என்பவர் பொதுவானவர். எந்த இயக்கம், எந்த சித்தாந்தம் என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் நலத்திற்காக செயல்படக்கூட வேண்டியவர். அப்படிப்பட்டதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சுயநல நோக்கத்தோடு அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது கண்டனத்திற்குரியது'' என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் கோவை ஈஷா மையத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரை வைகோ, ''ஈஷாவில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும். அந்த ஈஷா மையத்தை பற்றி எனக்குத் தெரிந்தமட்டில் வனவிலங்கு சட்டங்கள் பலவற்றை புறம்பாக செயல்பட்டுதான் அந்த மையத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் வழிபாட்டுத்தலமாக பார்க்கவில்லை. எவ்வளவோ சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த மாதிரி இடத்தில் போய் மக்கள் வழிபடலாம். ஆனால் அவர் தன்னுடைய சுயநோக்கத்திற்காக அந்த மையத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். அதில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற சில நிகழ்வுகளில் இருந்து தப்பிக்க மதத்தை உள்ளே கொண்டு வந்துள்ளார். ஈஷா மையத்தை பொறுத்தவரை இது முதல் சர்ச்சை கிடையாது. இதற்கு முன் அங்கு பல சர்ச்சைகள் நடந்திருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான பல விஷயங்கள் அந்த மையத்தில் நடந்திருக்கிறது. அதற்கு போதிய நீதி விசாரணை வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும், வைகோவின் கருத்தும்'' என்றார்.