தி.மு.க. சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ எனும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றுவந்தது. அதனை தொடர்ந்து ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ எனும் கிராம சபைக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் தொகுதியில் உள்ள மேற்கு ஒன்றியம் வீரக்கல் ஊராட்சியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ கிராம சபைக் கூட்டம் நடை பெற்றதில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்திற்கு ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமைத் தாங்கினார். அதுபோல் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய கிராம சபைக் கூட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமைத் தாங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் ஐ.பெரியசாமி, “ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாயிகள் முதல் 100நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வரை பாடாய்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி விலைவாசி உயர்வை கொண்டுவந்த மத்திய அரசு, இப்போது சமையல் எரிவாயுவிற்கு விலையை ஏற்றியதால் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். மத்திய அரசுதான் பொதுமக்களுக்கு துன்பங்களைக் கொடுக்கிறது என்றால், தமிழகத்தை ஆளும் எடப்பாடி தலை மையிலான அ.தி.மு.க. அரசும் பொதுமக்களுக்கு மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையை உயர்த்தி ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கிறது.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தலைவர் கலைஞர், ஐந்து பைசா கட்டண உயர்வுக்குக்கூட பலமுறை யோசித்து டீசல் விலையை ஏற்றினார். ஆனால், இப்போது தினம், தினம் விலை ஏறிக்கொண்டே போகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை தட்டிக்கேட்க முடியாத அடிமை அரசு தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது. இதை அப்புறப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் போவதோடு, விவசாய பொருட்கள் விலை ஏற்றத்தோடு வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் உட்பட உயர் கல்வி படிக்க முடியாது. 10 வருடங்களாக தமிழக மக்களைப்பற்றி மத்திய அரசும் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக நாங்கள்தான் மக்களின் காவலர் என வேஷமிடுகிறார்கள். 30 வருடங்களாக தொகுதி மக்களுடன் அண்ணனாக, தம்பியாக, மகனாக, சகோதரனாக செயல்பட்டுவரும் என்னைப் பார்த்து ஐ.பெரியசாமி தொகுதிக்கு என்ன செய்தார்? என பா.ஜ.க.வினர் பேசுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியின்போது, விலையில்லா எரிவாயுவுடன் கூடிய அடுப்பு, இலவச கலர் டி.வி, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி போன்ற எண்ணற்ற திட்டங்களை கலைஞர் செயல்படுத்தியபோது வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவன் நான். அமைச்சராக இருந்த காலத்தில் தொகுதிக்குள் வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்த என்னைப் பற்றி பேச இங்குள்ள அ.தி.மு.க.வினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் யோக்கியதை கிடையாது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வினரையும், அ.தி.மு.க.வினரையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். இந்த கலிக்கம்பட்டி ஊராட்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் 100 ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பா.ஜ.க.வினர் கால்பதித்தால் உங்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடும். கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு வந்த உதவித் தொகையை நிறுத்தி, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து வரும் பா.ஜ.க.வினரை தமிழகத்தில் நுழையவிடக்கூடாது. அதற்கு அனைத்து மக்களும் சபதம் எடுக்க வேண்டும்.
மோடியுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க. அரசு ஆட்சிக்குவந்தால் இலவச மின்சாரம் ரத்தாகும், மின் கட்டணம் உயரும், அரசு பேருந்துகள் தனியார் மையமாக்கப்படும், ரேஷன் அரிசி முதல் காய்கறி வரை பொது மக்களுக்கு கிடைக்க முடியாத நிலை ஏற்படும். டெல்லியில் 28 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, அம்பானியின் பேரனை பார்ப்பதற்கு விமானத்தில் சென்று வருகிறார்.
இந்த கரோனா காலத்தில் வீட்டுக்குள்ளே அ.தி.மு.க. அமைச்சர்கள் முடங்கிக்கிடந்தபோது தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தி.மு.க. நிர்வாகிகள் பம்பரம் போல் சுழன்று அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் வழங்கினார்கள். குறிப்பாக ஆத்தூர் தொகுதியில் மட்டும் 1 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மக்களுக்கு உயிர் வாழ கரோனா காலத்தில் வீடு தவறாமல் ரேஷன் கார்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை விட்டுவிட்டு இப்போது ஓட்டுக்காக எடப்பாடி ரேஷன் கார்டு ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறார். மக்கள் இனியும் அ.தி.மு.க. அரசை நம்ப தயாராக இல்லை. இன்று நாம் தொடங்கிய இந்த தர்ம யுத்தம் மாபெரும் வெற்றி பெறும். இந்த அ.தி.மு.க. அரசை தூக்கி எறிவோம்” என்று பேசினார்.