நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களையும் வென்றது. அதிமுக கூட்டணி ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கு அதன் பிரச்சார யுக்தியும், அதிமுக,பாஜக கூட்டணிக்கு எதிரான மக்களின் மனநிலையும் காரணமாக சொல்லப்பட்டது. மேலும் தேர்தலின் போது திமுக கட்சிக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் தற்போது கமலின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு பணியாற்ற போவதாக தகவல் வருகின்றன.
திமுகவின் நமக்கு நாமே திட்டம் இவரது ஆலோசனையின் படி தான் நடந்தது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற போது பிரசாந்த் கிஷோரை சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசித்ததாகவும் சொல்லப்பட்டது. பின்பு இந்த முயற்சிக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது பிரசாந்த் கிஷோரும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நெருக்கமானவர்கள் என்பதாலேயே ஓபிஎஸ் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக சொல்கின்றனர். தற்போது பிரசாந்த் கிஷோர், கமலை சந்தித்து அரசியல் ரீதியாக சில ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் கமலின் மக்கள் நீதி மய்ய கட்சிக்காக வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பணியாற்ற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தற்போதைய நிலையில் இருந்து வளர்ச்சி பாதைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறுகின்றனர். மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.