
தமிழக பாஜகவில் இருந்து விலகிய நிலையில், அமைச்சருடன் அண்ணாமலை பேரம் பேசியதாக பாஜக ஐடி பிரிவு முன்னாள் தலைவராக இருந்த நிர்மல் குமார் கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் நிர்மல் குமார். மேலும் தான் பாஜகவில் இருந்து விலகியது குறித்த காரணத்தை அறிக்கையாகவும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை, தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.
தொண்டர்களை மதிக்காத தான்தோன்றித் தனம் இவற்றுடன் ‘மனநலம் குன்றிய’ மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரை மறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” எனக் கூறியுள்ளார்.