அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எடியூரப்பா ஆட்சியே நீடிக்கும் என சதானந்த கவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் இன்று காலை எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம் தொடங்கியது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
221 தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளும் வாக்கெடுப்பில், பா.ஜ.க. தங்கள் தரப்பில் 104 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணி தங்கள் தரப்பில் 117 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் கூறிவருகின்றன. ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையான 111 எம்.எல்.ஏ.க்களை நிரூபிக்கும் கட்சிக்கே ஆட்சியமைக்கும் அதிகாரம் கிடைக்கும். அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றி வாக்களிக்காத வண்ணம் காங்கிரஸ் கொறடா விப் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்.
இரண்டு தரப்பும் தாங்களே ஆட்சியமைப்போம் என கூறிவரும் நிலையில், மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சதானந்த கவுடா, ‘இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள். அதேபோல், மாலை 4.30 மணிவரை காத்திருங்கள். நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கர்நாடகத்தில் எடியூரப்பாவின் ஆட்சியே நடைபெறும்’ என உறுதியாக தெரிவித்தார்.