கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ஆளும் கட்சியாக இருந்த பாஜக மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று பிரச்சாரம் செய்தன. அது மட்டுமின்றி பாஜகவிற்கு ஆதரவாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களும் பிரச்சாரத்தின் போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றே பிரசாரம் செய்தனர்.
கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களித்தனர். இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன. கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல் மத்தியப் பிரதேசத்திலும் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியானது பல்வேறு வியூகங்களை எடுத்து வருகிறது. அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமையானது மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்தியப் பிரதேச தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களான கமல்நாத், திக்விஜய்சிங், மபி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அகர்வால் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு ராகுல் காந்தி பேசுகையில், "மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது பற்றிய விரிவான ஆலோசனை நடத்தினோம். கர்நாடகாவில் 135 இடங்களில் வெற்றி பெற்றது போலவே மத்தியப் பிரதேசத்திலும் 150 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார். கமல்நாத் பேசுகையில், "நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம். ஆட்சியைப் பிடிப்பதே எங்கள் குறிக்கோள்" எனத் தெரிவித்தார்.