நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் முன்னதாக நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, 2014ம் ஆண்டு எந்த வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி, வரிவிதிப்பு என மக்கள் விரோதத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியது. வளர்ச்சிக்கான திட்டங்கள் எல்லாம் மேற்கொள்ளப் படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க, பா.ஜ.க. உள்ளிட்ட ஊழல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
ரபேல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பிய போது பிரதமர் மோடி மௌனம் சாதிக்கிறார். ராகுல் நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் ஒரு பகுதி தான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டம். ராணுவ வீரர்களின் சாதனையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை ஈட்டும். மக்களின் நம்பிக்கையோடு ராகுல் அடுத்த பிரதமராகப் பதவி ஏற்பார். தி.மு.க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் நிச்சயம் வருவார் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நெல்லை மாநகர காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன். நெல்லை கிழக்கு மற்றும் மே.மாவட்டத் தலைவர்களான சிவகுமார் பழனிநாடார், மாநில செயலர் வானமாமலை தனுஷ்கோடி ஆதித்தன். ராமசுப்பு ரவிஅருணன் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.