
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 6576 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு 13 தொழிற்சங்கங்கள் உள்ளன. மத்திய தொழிலாளர் ஆணையம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி அதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் வருபவர்களுக்கு என்எல்சி உடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கீகரிக்கும். அந்த வகையில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 15ஆம் தேதி வேட்புமனு 16ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனை நடைபெற்றது. பின்னர் களத்தில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு எண்களால் ஆன தனிச் சின்னம் வழங்கப்பட்டது.
கடந்த 25ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் ரகசிய தேர்தல் நடைபெற்றது. 11 இடங்களில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டது. இதில் அதிகாலை முதல் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 6137 பேர் வாக்களித்தனர். மொத்தத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின. பின்னர் துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 9-வது வட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு எடுத்துச் சென்று இரவு 9 மணி அளவில் வாக்குகள் என்னும் பணி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொமுச 2507 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் 1389 வாக்குகள் பெற்று என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகாரம் பெற்றது.
இதில் பாட்டாளி தொழிற்சங்கம் 1385 வாக்குகளும் சிஐடியு 794 வாக்குகளும் திராவிட தொழிற்சங்கம் 231 வாக்குகளும் பாரதிய மஸ்தூர் சங்கம் 58 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் தொமுச ரூ.4,000, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் ரூ.3000, பாட்டாளி மக்கள் கட்சி ரூ.2000 என தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகள் பெற்றுள்ளது என்றும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தொழிலாளர்களுக்கு சுரங்கம் பகுதியில் பணம் பட்டுவாடா செய்யும்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும், அப்போது தொழில் பாதுகாப்பு படையினர் அங்குச் சென்று அவர்களை கலைந்து போக செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.