தமிழகம் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் ஒருபுறம் வாக்குச் சேகரிக்க, தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (20/03/2021) விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்தை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நாட்டு மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற வெற்றிக் கூட்டணி. மக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி, திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அமைச்சர் சி.வி.சண்முகம். கிராமங்களில் வீடில்லாத ஏழை மக்களுக்கு, அரசே நிலம் வாங்கி வீடு கட்டித்தரும். ஏப்ரல் 1- ஆம் தேதியில் இருந்து விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. தேர்தலில் வாரிசுகள் போட்டியிடுவதில் தவறில்லை; ஆனால் கட்சிக்கே தலைவராவதுதான் தவறு. சட்டப்பேரவையில் கலாட்டா செய்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? ஆட்சியில் அ.தி.மு.க. இருக்கும்போது மு.க.ஸ்டாலின் மனு வாங்கி என்னச் செய்யப் போகிறார்? தேர்தல் தோல்வி பயத்தில் உள்ளார் ஸ்டாலின்; தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க.வுக்கு இறுதித் தேர்தல். விழிப்போடு இருப்பவர்கள் தமிழக மக்கள், ஸ்டாலினின் பேச்சை மக்கள் கேட்கமாட்டார்கள். மக்களுக்குத் துரோகம் செய்யும் கட்சியான தி.மு.க. என்ற வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில்தான் ஊழல் நடைபெறும்; மக்களைக் குழப்ப வேண்டும் என்று அவதூறு பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின். உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும், அது அ.தி.மு.க.விடம் உள்ளது, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகிற கட்சி அ.தி.மு.க. 100 ஆண்டு கண்ட விழுப்புரம் நகராட்சிக்காக ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.