8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவிற்கு 125 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 4 மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் போன்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யவில்லை. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாதியளவு (118) இருந்தாலே சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்ற நிலையில் 125க்கும் மேற்பட்டோர் இருந்தது மசோதா நிறைவேறக் காரணமாக அமைந்தது.
பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சட்ட மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ''தொழிலாளர் உரிமையை பறிக்கும் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ''இதை நடைமுறைப்படுத்த முடியாது. கடுமையாக எதிர்ப்போம். எப்படி பாஜக வேளாண்மையை முடிக்க வேளாண் மசோதாவை கொண்டு வந்ததோ, காடுகளை முடிக்க வனப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்ததோ அதுபோலத்தான் இது. இவ்வளவு காலம் போராடி 8 மணிநேரம் உழைப்பதே அதிகபட்சம். அவர்களிடம் போய் 12 மணி நேரம் உழை என்றால் இது தொழிலாளர் நலச்சட்டம் கிடையாது. இது நாசச் சட்டம். இதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம். பாஜக ஆளுகின்ற மாநிலத்தை தவிர முதன்முதலாக தமிழ்நாட்டில் இதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏன்? கேரளாவில் இருக்கிறதா? ஆந்திராவில், கர்நாடகாவில் இருக்கிறதா? எதற்காக இது? கேட்டால் பாஜகவை எதிர்க்கிறோம் என்பார்கள். பாஜகவின் கிளைக்கழகமாக செயல்படுகிறார்கள்'' என்றார்.