
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். அதே சமயம் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23ஆம் தேதி (23.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வரும் திங்கட்கிழமைக்குள் (28.04.2025) தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டமுன்வடிவை இன்று (26.04.2025) அறிமுகம் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கள்ளச்சாராயக்காரர்கள், கணினி வெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் திருத்தச் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் பதவியைச் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.