தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. அதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. இதை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் கண்காட்சியின் கடைசி நாளான நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த 9 நாட்களில் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைப் பார்த்துள்ளார்கள். வருமானவரித்துறை சோதனை போன்ற எந்த சோதனை இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். சேலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு விளையாட்டு அரங்கம் செய்துள்ளார்கள். அதை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. சட்டப்பேரவை முடிந்து நானும் அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களில் இருக்கிறேன். ஒவ்வொரு அறிவிப்பாக நிறைவேற்றுவோம்” எனக் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பிற்கு இடையே செய்தியாளர் ஒருவர் பாஜக உடன் கூட்டணியா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ஏன் பாஜக உடன் கூட்டணி வைக்கப்போகிறோம். நீங்கள் தான் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அதே சமயத்தில் அது குறித்த கேள்வியை செய்தியாளர் தொடர்ச்சியாக முன்வைக்க அமைச்சர் கே.என்.நேரு அவரிடம், “தம்பி என்ன கேள்வி கேட்கிறீர்கள். கேள்விகளை சரியாக கேளுங்கள். இது மாதிரி எல்லாம் பேசாதீர்கள். வேறு நல்ல கேள்விகளை கேளுங்கள்” என்றார். அதற்கும் உதயநிதி, “பரவாயில்லண்ணே... பரவாயில்ல.. விடுங்க” என்று கூறி நிலைமையை சீராக்கினார்.