நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.