நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். எனது தாய்மொழி தமிழ். எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம் இந்தியா என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
திருச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ரஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் சொல்லியதில் உள்ள உட்பொருளை நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் பிரிவினைவாதக் கருத்துகள் அதிகமாக இப்பொழுது வருகிறது. இந்த நேரத்தில் அவர் அதைச் சொல்லியுள்ளார். அவர் சொல்லியது, ‘தமிழகத்தை தன் நாடு என அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தனிநாடு என எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்பதைத்தான். இதை அவ்வாறு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் சமீப காலங்களில் சில அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் பிரிவினைவாதம் பேசுவது அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு தனிநாடு என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. இந்தியாவின் கீழ் தன்னாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசியிருக்கிறார். இப்படித்தான் அவர் கூறியதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். எனது தாய்மொழி தமிழ். எனது மாநிலம் தமிழ்நாடு. எனது தேசம் இந்தியா. இந்த எண்ணம் இல்லாமல் எந்த விதத்திலும் துண்டாக்கப்பட்டு விடக்கூடாது. அவ்வாறு துண்டாக்கப்படுவது, கொண்டாடப்படவும் விடக்கூடாது. நாம் அனைவரும் இணைந்து தான் இருக்க வேண்டும் என்பதை அவர் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். நாம் இந்தியாவில் ஓர் அங்கம் தான்” எனக் கூறியுள்ளார்.