மத்திய பாஜக மோடி அரசை கண்டித்தும் அதானி நிறுவனத்தைப் பற்றி பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்காததை கண்டித்தும் இந்தியா முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை 13 ஆம் தேதி நடத்தியது. அதில் ஒரு நிகழ்வாக ஈரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிறகு அவர் செய்தியாளரிடம் பேசும் போது, "மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைக் காக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏழை மக்களின் நலனுக்கு எதிரானதாகும். கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற கூலித்தொழிலாளர்கள் புலம்பெயராமல் தடுக்கவும், அபிவிருந்தி திட்டங்களை நிறைவேற்றவும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் இதன் மூலம் பயன்பெற்று வந்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 60 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளமாக ரூபாய் 17 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டியுள்ளது. அதனைக் கொடுத்து விட்டால் மீதம் 43 ஆயிரம் கோடிதான் இருக்கும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இது ஏழைகளுக்கான அரசு எனக் கூறி வருகிறார். ஆனால், நடைமுறையில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதிராகச் செயல்படுகிறார். விவசாயிகளுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் விரோத பட்ஜெட்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த அதானி குடும்பம் இன்று இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கியின் பல்லாயிரம் கோடி பணத்தை அவர் கொள்ளையடித்துள்ளார் என்பதை அமெரிக்க நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, பிரதமர் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அதுவும் ஏற்கப்படவில்லை. இந்த இரண்டையும் கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யவுள்ளோம். மத்திய பட்ஜெட் குறித்தும், அதானி குடும்ப கொள்ளை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அது மீண்டும் போடப்படுவதாக வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம். இல்லாததைச் சொல்லி பழனிசாமி பிரச்சினைகளை திசை திருப்ப பார்க்கிறார். முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறார். அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயர்களை சட்டப்பேரவையில் ஆளுநர் படிக்கவில்லை. அதற்கு கூட பழனிசாமி கண்டிக்கத் தயாராக இல்லை. பாஜகவின் கொத்தடிமையிலும் கொத்தடிமையாக அதிமுக உள்ளது. வேட்பாளரையே அவர்களைக் கேட்டுத்தான் முடிவு செய்யும் நிலையில் உள்ளனர்.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் ஆதாரமில்லாமல் சொல்லமாட்டார். மூத்த அரசியல் தலைவரான நெடுமாறன் கூறுவது போல் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி" என்றார்.