தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசுகையில், ''முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோவில் எனது தொகுதியான பாபநாசத்தில் உள்ளது. சமீபத்தில் நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏறி சென்று தரிசனம் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த கோவிலில் மின்தூக்கி அமைத்துத்தர அமைச்சர் முன்வருவரா? என சபாநாயகர் மூலம் அறிய விரும்புகிறேன்'' என்றார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''நான்காம் படைவீடான சுவாமி மலை குறித்து பேசிய உறுப்பினர் முதலில் நன்றி சொல்வார் என எதிர்பார்த்தேன். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின்படி அங்கு தங்கும் விடுதிக்கு ஒப்பந்தம் அறிவித்து விடுதி கட்டப்படுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 திருக்கோவில்களில் மின்தூக்கி அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. கேட்டதெல்லாம் தருகின்ற அரசு இது. எனவே சுவாமி மலைக்கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நிறைவேற்றித் தரப்படும்'' என்றார்.