திருச்சி அ.தி.மு.க. மா.செ. பதவி கிடைத்தவுடன் எம்.பி. குமார் கட்சிகாரர்கள் எல்லோரையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார். நேற்று முதல் முறையாக மலைக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட 10 வார்டு வட்ட செயலாளர்கள் ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்ப்பு செயல்வீரர் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டிருருந்த மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தீடிர் எனக் கூட்டத்தைப் புறக்கணித்தார். இதைப் போல் தலைமை ஏற்று நடத்திக்கொடுக்க வேண்டிய அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கூட்டத்திற்கு வராமல் அவரவர் அலுவலகத்திலேயே இருந்து புறக்கணித்தனர். இதே போல் மாநகரில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலர் கார்த்திகேயன், சுரேஷ்குப்தா, வெல்லமண்டி சண்முகம் உள்ள பல முக்கியப் பொறுப்பாளர்கள் எல்லோரும் புறக்கணித்தனர்.
அமைச்சர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட மா.செ. குமார் தன்னுடைய பலத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் 10 வார்டுகள் மட்டுமே கூட வேண்டிய இடத்திற்குத் திருச்சி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கட்சியினரை வரவழைத்து கூட்டத்தை நிரப்பித் திக்குமுக்காட வைத்தார்.
கூட்டத்தில் பேசிய எம்.குமார், நான் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாக்கு வித்தியாசத்தைப் பார்த்து தான் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார். இந்தக் கட்சியில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த பலர் எந்தப் பலனும் அனுபவிக்காமல் இருக்கீங்க என்பது எனக்குத் தெரியும். உள்ளாட்சி தேர்தல் வரபோகிறது கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே இங்கே முன்னுரிமை.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது. மீண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் பல வருடங்களாக அவரை சுற்றியிருந்து சம்பாதித்த கூட்டம் கட்சியைக் கைப்பற்ற நினைத்தது. ஆனால் அவர்களுக்குக் கிடைத்தது பெங்களுர் பரப்பான அக்ஹகாரம் சிறைச்சாலை தான். அவர்களைப் பின்பற்றிச் செல்லும் டி.டி.வி தினகரனும் அதே பெங்களுரு சிறைக்குத் தான் செல்வார்கள்.
திருச்சி மாநகரில் உள்ள முக்கியமான நிர்வாகிகள் 160 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கட்சி பத்திரிக்கைக்குச் சந்தா செலுத்தியிருக்கிறேன். இனி மேல் ஒவ்வொரு பகுதிக்கு 100 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கட்சி பத்திரிக்கை சந்தாவை என்னுடைய சொந்த பணத்திலே கட்டுவேன்.
சிறப்பாகச் செயல்படும் பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் ஆகியோருக்குச் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது. அது என்ன என்பதைப் பிறகு அறிவிப்பேன். இனிமேல் நடைபெறும் கட்சி கூட்டத்திற்குத் தொடர்ந்து 3 முறைக்கு மேல் வராமல் இருக்கும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள். யார் கட்சியில் தொடர்ந்து பணியாற்றுகிறார்களோ அவர்களுக்குப் பதவி வழங்கப்படும் என்று அறிவிப்புகளை அள்ளித்தெளித்தார். இந்தக் கூட்டம் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த கூட்டம் அல்ல கட்சியின் தொண்டர்களே ஏற்பாடு செய்த கூட்டம் என்றார். இனி வார்டு வார்டாக அடுத்த ஜீன் வரை ஆலோசனை கூட்டத்திற்காகப் பட்டியலை அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தைத் தலைமை ஏற்க்க வேண்டியவர்கள் வராதால் புதிய பகுதி செயலாளர் பொறுப்பு போடும் வரை வணக்கம் சோமு என்பவரை பொறுப்பாளராக நியமிக்கிறேன். அவர் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை செய்து புதிய பகுதி செயலாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள் என்றார்.