அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மக்களவைத் தொகுதியிலும், அதிமுக சிதம்பரம் (தனி) தொகுதியிலும் போட்டியிடுகிறது. கடலூர் வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமி, சிதம்பரம் வேட்பாளர் பொ.சந்திரசேகர் ஆகியோரை அறிமுகப்படுத்தும் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர், “எதிர்க்கட்சியின் வேட்பாளர் வைப்புத்தொகை இழக்கும் அளவிற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதிமுக என்றதும் சத்துணவு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவை தான் நினைவுக்கு வரும். 69 சதவீத இடஒதுக்கீட்டினை 9 ஆவது அட்டவணையில் சேர்த்த பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். அதனால்தான் அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கணை என்ற பட்டம் வழங்கப்பட்டது.
பாஜக என்றதும் கார்கில் போர் நினைவுக்கு வருகிறது. நம்மிடம் வாலாட்டிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானை ஓடஓட விரட்டியவர் வாஜ்பாய். அந்த வரிசையில் தற்போது பிரதமர் நரேந்திரமோடியும் வீரத்துடன் போரிட்டு வருகிறார். அவர்தான் மீண்டும் பிரதமர் என்பது உறுதியானது.
பொங்கல் பண்டிக்கைக்கு ரூ.1,000, ஏழைக்குடும்பத்திற்கு ரூ.2,000 என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதனால்தான் மக்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்தக் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகி 40 மக்களவைத் தொகுதியிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும்” என்று மத்திய பா.ஜ.க அரசையும், மாநில அ.தி.மு.க அரசையும் புகழ்ந்து தள்ளினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இராமதாஸ், “இரண்டு லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்.எல்.சி. மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்" என்றும், எதிர்க்கட்சிகள் நாகரீகமற்ற அரசியல் செய்கின்றனர். எங்கள் கூட்டணியினர் நாகரீக அரசியல் செய்கிறோம். பாமக தேர்தல் அறிக்கையில்கூட இல்லாத வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள உச்சநீதிமன்ற கிளையினை சென்னையில் உருவாக்க முயற்சி செய்வோம் என்று கூறி இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் தென் மாநிலங்கள் டெல்லிக்கு செல்லாமல் இங்கேயே வழக்குகளை முடிக்க உதவியாக இருக்கும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டுவர முயற்சி செய்வோம்" என்றும் கூறினார்.