இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதேவேளையில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்களும் நிகழ்ந்துவருகிறது. இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகப்படுத்தவும், புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் பல் வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதேபோல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பும் எழுந்தது. இந்தநிலையில், அந்நிறுவனத்திற்கு அனுமதி தருவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டிருந்தது. அதனால், மதிமுக, விசிக, நாதக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி, சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதன் விவரம் வருமாறு; “கோவிட்-19 பெருந்தொற்று 2-ஆவது அலை சுனாமி போல் நாடு முழுவதும் அடித்து கொண்டிருக்கும் நேரத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு, எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, எங்களின் கருத்துகளை எடுத்து வைக்கிறேன்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனம் - ‘ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதியுங்கள். அந்த ஆக்சிஜனை இலவசமாக வழங்குகிறோம்’ என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அதில் தமிழக அரசும் தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளது.
அந்த மனுவினை ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், “தமிழக அரசே அந்த ஆக்சிஜன் தயாரிக்கும் பிளான்டை ஏன் எடுத்து நடத்திடக் கூடாது” என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.
“மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.
அதே நேரத்தில் – நாம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை, மறந்து விட முடியாது. அதில் 13 அப்பாவிகள் உயிரிழந்து - அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்றும் நிலைகுலைந்து நிற்கின்றன. தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பையும் நாம் புறக்கணித்து விட முடியாது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த நேரத்தில், ஏப்ரல் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடத்திய “கருத்துக் கேட்பு” கூட்டத்தில் கூட, தூத்துக்குடி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அவர்களின் எதிர்ப்பையும் நாம் உதாசீனப்படுத்திட முடியாது.
அதேசமயம் தூத்துக்குடி மக்கள் மனிதநேயத்தின் மறுபக்கமாக திகழுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் - ஒருவருக்கு ஆபத்து என்றால் உடனே ஓடிச் சென்று உதவிட இதயம் கொண்டவர்கள் அந்த மக்கள்.
நாடு முழுவதும் - ஏன், தமிழ்நாட்டிலேயே கூட ஆக்சிஜன் தேவைப்படுகின்ற இந்த நேரத்தில்- “ஸ்டெர்லைட் ஆக்சிஜன் பிளாண்ட்டை” மட்டும் இயக்கி - மக்களைக் காத்திட ஆக்சிஜன் தயாரிப்பது குறித்து, மனிதநேயத்தின் அடிப்படையில் நாம் எடுக்க வேண்டிய முடிவுதானே தவிர - ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அல்ல.
நாட்டு மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி ஆக்சிஜன் கோரிக்கையை வைக்கிறார்கள். உச்சநீதிமன்றமே ஏன் மாநில அரசே அதை தயாரித்துக் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தைப் பார்த்துக் கேட்கிறது. இந்த நேரத்தில் ஒருமைப்பாட்டின் பக்கம் –மனிதாபிமானத்தின் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழகம் ஆக்சிஜன் வழங்குவதிலும் முன்னணியில் நின்றது என்ற பெருமையும் நாம் பெறக் கூடியதுதான்.
ஆகவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் கருத்துகளை முன்வைக்கும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளாண்ட் மட்டும் செயல்பட அனுமதிப்பது என்றால், முக்கியமான சில கருத்துகளை முன்வைக்க வேண்டும். அதில்,
* இந்த அனுமதி தற்காலிகமானது.
* அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி. வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது.
* ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதை கண்காணித்திட - மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.
* அக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும்.
* ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.
* இப்போது ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்படும் அனுமதியை எக்காரணம் கொண்டும் ஒரு முன்னுதாரணமாக வைத்து - ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக்கூடாது என்று அரசு உத்தரவிலேயே தெளிவுபடுத்திட வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலையில் இந்த அனுமதியின் பெயரில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும்.
* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்.
நாங்கள் கூறிய இந்தக் கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அழுத்தமான கருத்துகளாக முன்வைக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.