Skip to main content

'அம்மா' உணவகம் மூடும் நிலையில் இஸ்கான் உணவு திட்டத்திற்கு உதவியா? கலி.பூங்குன்றன் கண்டனம்

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

 

அதிமுக அரசின் 'அம்மா' உணவகம் மூடும் நிலையில் இஸ்கான் உணவு திட்டத்திற்கு உதவியா? என கேள்வி எழுப்பியதுடன் காலை உணவு என்று கூறி அதில் தங்கள் இந்துத்துவக் கலாச்சாரத்தைத் திணிக்கிறார்கள் என்றும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கூறியுள்ளார்.
 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 25.2.2020 அன்று காலை நடைபெற்றது. 


‘சத்துணவிலும் மதவாத நஞ்சா?’ எனும் தலைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

 

dravidar kazhagam



 

அப்போது அவர், ''நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு, அதற்குப் பின்னாலே பச்சைத்தமிழர் காமராசர், தொடர்ந்து திராவிட இயக்கங்களால் தொடரப்பட்டு வரும் திட்டம் மதிய உணவுத் திட்டம்.
 

நீதிக்கட்சி காலத்தில் சென்னையில் மதிய உணவுத்திட்டம், காமராசர் ஆட்சிக்காலத்திலே மதிய உணவுத்திட்டம், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிகளில் மதிய உணவு பிள்ளைகளுக்கு கொடுத்து, இலவச சீருடை கொடுத்து, இலவச படிப்பு, இலவச புத்தகம், இலவச சைக்கிள் திட்டம், இன்றைக்கு ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களிடையே இருந்து வரும் பிள்ளைகள் படிக்கக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.
 

இப்போது காலை உணவு கொடுப்பதற்காக ‘இஸ்கான்’ என்று ஒரு நிறுவனம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பு, பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பதாக சொல்கிறார்கள்.
 

காலை உணவுதானே கொடுக்கிறார்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்? என்ற கேள்வி எழலாம்.
 

காலை உணவு தாராளமாக கொடுக்கட்டும். ஆனால், அந்த நிறுவனங்களின் இந்துத்துவ கொள்கை - காலை உணவுத்திட்டத்திலே இருக்கிறது. பூண்டு, வெங்காயம் உணவில் இடம் பெறாது என்று சொல்கிறார்கள்.


 

பெரும்பாலான பிள்ளைகளின் உணவில் இவ்விரண்டும் உண்டு தானே.
 

உணவிலே இந்துத்துவா கண்ணோட்டத்தோடு சொல்வது என்பது உள்ளபடியே இந்த உணவுத்திட்டத்தாலே அவர் களுடைய மதவாதத்தை திணிக்கின்ற போக்காகவே கருத வேண்டும்.
 

வெங்காயம் விலை அதிகமானபோது, நாடாளுமன்றத் திலேயே மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதிநிலை அறிக்கையின்போது, நான் வெங்காயம் சாப்பிடும் பரம் பரையில் வரவில்லை என்றார்.
 

காலை உணவு என்கிற பெயரில் கார்ப்பரேட் மயமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுவதும் நிதி திரட்டுகிறார்கள் -  ஆதாயம் இல்லாமல் அவர்கள் இதில் இறங்கவில்லை.
 

மத்தியில் பாஜக அரசு வந்த உடனே மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்றார்கள். அது பிரச்சினை ஆனது. அவர்களின் இந்துத்துவாத் திட்டத்தையெல்லாம் மக்கள் மத்தியில் திணிக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் காலை உணவுத்திட்டத்தில் வெங்காயம், பூண்டு இல்லை என்கிறார்கள். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்.


 

dravidar kazhagam


 

அம்மா உணவுத் திட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்பொழுது அத்திட்டம்  நசிந்து விட்டது. பெயரளவுக்குத் தான் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலவசம் என்ற பெயரால் மத முக்காடு போட்டு வரும் கலாச்சாரத் திணிப்பு உணவுத் திட்டத்துக்குப் பச்சை கொடிக் காட்டுகிறது அதிமுக அரசு.


கருநாடக மாநிலத்தில்கூட எதிர்ப்பு வெடித்துள்ளது.
 

இந்த போராட்டம் ஒரு தொடக்கம் என்றார் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். ஆம் இது வெறும் தொடக்கம்தான். தொடர்ந்து போராடுவோம். இந்துத்துவா திணிப்பு திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்று கண்டன உரையில் குறிப்பிட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்