மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது மோடி தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை மற்றும் துண்டில் இருந்தது அணைத்து தரப்பு மக்களையும் கவனிக்க வைத்தது.அதே போல் மோடி தமிழகம் எப்போது வந்தாலும் கோ பேக் மோடி என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும். ஆனால் இந்த முறை டோன்ட் கோ பேக் மோடி என்ற வாசகமும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. இது தமிழக எதிர்கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு மோடி எப்போது வந்தாலும் இவ்வளவு எதிர்ப்பு ஏன் வருகிறது என்று வட இந்திய மக்களிடையே பெரும் கேள்வியாகவே இருக்கிறது.

இதற்கு தமிழகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் மிக முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிடாமல் இருந்தது பெரிதும் தமிழக மக்களைப் பாதித்தது என்று கூறுகின்றனர். அதே போல் தமிழகத்தில் இயற்கை பேரிடர் வந்த நிலையில் மத்திய பாஜக அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை என்று சொல்லப்பட்டது. அதோடு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பாஜக நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது. இப்படி தன் மீதான எதிர்மறை கருத்துக்களை புறந்தள்ளவே, மோடி தற்போது தமிழர் மற்றும் தமிழர் கலாச்சாரத்தின் மீது அக்கரை காட்டி தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க முயல்கிறாரோ எனவும் தமிழக அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எப்படி இதை எடுத்துக்கொண்டாலும் கூட பிரதமர் மோடி தனது அரசியல் ராஜதந்திரத்தை வெற்றிகரமக நடத்திக்கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் கருதுகின்றனர். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் என்ற பதவியைக் கொடுத்த மோடி, அடுத்து, சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பை சென்னை மாமல்லபுரத்தில் நடத்தியுள்ளது, தமிழகத்தில் பலவீனமடைந்துள்ள பாஜகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். மோடியின் இந்த நடவடிக்கையை தமிழக எதிர்க்கட்சிகள் உற்று கவனித்து வருகின்றனர்.