விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் கடந்த 05.05.2023 அன்று இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகுதான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். முதல் நாளில் இந்தியா முழுவதும் இப்படம் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பிரதமர் கருத்து தெரிவித்ததற்கு தனது ஆட்சேபங்களை பதிவு செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஆளுநராக இருந்து கொண்டு அந்த பொறுப்பின் மகத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடிய வகையில் அவர் பேசுவதும் செயல்படுவதும் கண்டனத்திற்கு உரியது. அவர் பதவி விலகிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்படட்டும்.
கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் தற்போது திரையிடப்படுகிறது. ஒரு சினிமா ரசிகரைப் போல் இந்தியாவின் அதி உயர் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். திரைப்படத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டும் பேசிக்கொண்டும் உள்ளார். அவருடைய பொறுப்பிற்குரிய மகத்துவத்தை சிதைக்கும் வகையில் அவர் ஒரு திரைப்படத்தைப் பற்றிய விமர்சனத்தை வைக்கிறார்” எனக் கூறினார்.