குரூப் 2 தேர்வு குளறுபடிகளுடன் நடந்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 5446 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2 முதல்நிலைத் தேர்வு தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 25 ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டன.
காலையில் நடத்தப்பட்ட தமிழ்த் தாள் தேர்வில், உதாரணமாக ஒவ்வொரு தேர்வருக்கும் கொடுக்கப்பட்ட பதிவெண், கேள்வித்தாளிலும் விடைத்தாளிலும் இடம் பெற்றிருக்கும். அதன்படி, கேள்வித்தாளில் குறிப்பிடப்பட்ட பதிவெண் உடைய தேர்வருக்கு அந்த குறிப்பிட்ட கேள்வித்தாள் செல்ல வேண்டும். இது புதிதாக இவ்வாண்டு தொடங்கப்பட்ட ஏற்பாடு என்பதால் முறையாக செய்யப்படவில்லை. இதனால் தேர்வர்களுக்கு வேறுவேறு பதிவெண்களை கொண்ட வினாத்தாள்களும் விடைத்தாள்களும் வழங்கப்பட்டன. சில நேரஙகள் கழித்தே இந்த தவறு உணரப்பட்டதால், கண்காணிப்பாளர்கள் மீண்டும் அந்த வினாத்தாளை வாங்கி சரியான தேர்வர்களுக்கு வழங்கினர். இதனால் சில நேரம் வீணானது. அதேசமயம், பதிவெண்ணை சரியாக காணாத தேர்வர்களும் விடைகளை குறித்துவிட்டனர். இதனால் சரியான பதிவெண்கள் கொண்ட தேர்வர்கள் அந்த விடைகளை மாற்ற முடியாமல் இருந்தது.
தொடர்ந்து மாலை தேர்வுக்கான வினாத்தாள் விடைத்தாள் உறை, தேர்வர்கள் முன்னிலையில் பிரிக்கப்படாமல் வேறு ஒரு அறையில் பிரிக்கப்பட்டது. இதனால் தேர்வர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த குளறுபடிகளால் தேர்வினை மீண்டும் நடத்த வேண்டும் எனப் பல்வேறு மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் 25.02.23 சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களில் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதன் காரணமாக தகுதி வாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக 25.02.23 நடைபெற்ற தேர்வை ரத்து செய்து வேறு ஒரு நாளில் உரிய முறையில் மறு தேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.