திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருசாமி. 1937ம் வருடம் பிப்ரவரி 27ம் தேதி பிறந்த அவர் இளம் வயதிலேயே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுடன் இருந்துள்ளார். அதன் பிறகு திமுகவில் 1977ம் ஆண்டு முதல் இன்றுவரை (2020) ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். தற்போது ரெட்டியார்சத்திரம் இரண்டு ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளராக பதவியில் உள்ளார்.
1986ம் வருடம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய திமுக சேர்மனாக (ஒன்றியக்குழு தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 03.03.1991 வரை சிறந்த முறையில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அதன் பின்னர் கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, 1991ம் வருடம் மாவட்ட கவுன்சிலராகவும், அதன்பின்னர் தொடர்ந்து 2011 வரை ஒன்றியகுழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது திமுகவின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக இன்றும் உள்ளார். கடந்த 27ம் தேதி நடைபெற்ற
உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 11ல் திமுக சார்பாக ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார்.
தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.கண்ணனை விட 753 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற அன்றே ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என திமுக மற்றம் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் கூறிவந்தனர். 11.01.2020 சனிக்கிழமை அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 34 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே பதவிக்கு 84 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப.க.சிவகுருசாமிக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். சென்னை சென்று திமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகுருசாமி, பின்னர் அண்ணா சமாதிக்கும், கலைஞர் சமாதிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.