சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் பிரச்சார யுத்திகளும் மாறிக் கொண்டிருக்கிறது. தங்களின் உடல் நலம் குறித்தும், கண்ணீர் வடித்தும் பிரச்சாரம் செய்வது பேசுபொருளாகிறது. பல இடங்களில் துணி துவைப்பது, அடுப்பு ஊதுவது, தோசை சுடுவது, களை பறிப்பது, நாற்று நடுவது என்ற காட்சிகளும் தற்போது காமெடிகளாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் வெற்றி இலக்கை நோக்கி கடும் பயணத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகளையும் தேர்தல் களத்தில் இறக்கி பரப்புரை செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் முதலில் மகள்களை களமிறக்கியது விராலிமலை அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தான். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தொகுதியை வலம் வரத் தொடங்கியவர். மறக்காமல் தனது இரு மகள்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று மழலைக் குரலில் பேச வைத்திருக்கிறார்.
முதல் நாளிலேயே முதல் மகள் பிரியதர்ஷினி, “இவரு எங்க அப்பா என்று சொல்ல முடியாது, ஏன்னா எப்பவும் உங்க கூடவே இருக்கிறதால இவரு உங்க வீட்டுப்பிள்ளை தான்” என்று பேசி அசத்தினார். தொடர்ந்து சில நாட்களாக தனது இரண்டாவது மகளிடமும் மைக்கை கொடுத்துள்ளார். இவரது பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “நான் உங்க விஜயபாஸ்கரோட ரெண்டாவது மகள், உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவரு துடிச்சுப் போயிடுவாரு, உங்களுக்கு காது கேட்கலன்னா காது மெசினா வருவாரு, கண்ணு தெரியலன்னா கண்ணாடியா வருவாரு.. கஜா புயல்ன்னா கரண்டா வருவாரு.. கரோனான்னா மாஸ்க்கா வருவாரு.. பொங்கல்ன்னா சீரும் சிறப்பா வருவாரு..” இப்படியான இவரது பேச்சு வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து பரப்புரைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
அதேபோல் அதே தொகுதியில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இணையாகக் களத்தில் நின்று போராடும் திமுக வேட்பாளர் பழனியப்பன் போகுமிடங்களில் எல்லாம் ரெண்டு முறை தோற்றேன், மீண்டும் தோற்றால் என்னைப் பார்க்க முடியாது என்று கண்ணீரை சிந்தி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில், தனது மகளையும் பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். பழனியப்பன் மகள், மக்களிடம் பேசும் போது “எங்க அப்பாவோட ஆசை இந்த தொகுதி முழுவதும் இலவச சிகிச்சை கிடைக்கனும் என்பது தான். அதை நிறைவேற்ற நான் வரப்போறேன். நான் இப்ப எம்பிபிஎஸ் 3வது வருசம் படிக்கிறேன். படிப்பு முடிந்ததும் டாக்டராகி தொகுதி மக்களுக்கு கிராமம் கிராமமாக இலவச சிகிச்சை அளிக்க வருவேன்” என்று பேசி வருகிறார்.
இதேபோல மன்னார்குடியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் எஸ்.காமராஜ் நெஞ்சுவலியால் மருத்துவமனைக்குப் போய் ஆஞ்சியோ செய்து கொண்டு ஓய்வெடுத்து வரும் நிலையில், அவருக்காக மற்ற கட்சி நிர்வாகிகளோடு வேட்பாளர் எஸ்.காமராஜின் மகள் தேர்தல் களத்தில் இறங்கி “எங்க அப்பாவுக்கு ஓட்டுப் போடுங்க” என்று கலக்கி வருகிறார். இப்படி பல வேட்பாளர்கள் தங்கள் செல்ல மகன்கள், மகள்களை தேர்தல் களத்தில் இறக்கி பிரச்சாரங்களை செய்வதால் வாக்காளர்களின் மனங்களில் மாற்றங்களையும் உணர முடிகிறது.