
ஜம்மு காஷ்மீருக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த அந்த தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தைக் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வாயிலாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையில் 1960இல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு எனபல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி முடிவுகளால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா எடுத்த முடிவின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லக் கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் எனும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாக்லிகார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு நதிநீர் சென்று வந்தது. இந்த சூழ்நிலையில், ராம்பன் அணையின் மதுகுகளை மூடி இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்தி வைப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருக்கும் சிந்து நதிநீர் தற்போது இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சிந்து நதிநீரை நிறுத்தி வைத்த இந்தியாவின் இந்த முடிவு சட்டவிரோத நடவடிக்கை என்றும் இதன் மூலம் இந்தியா நீர் போர் நடத்துகிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

1947இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது சிந்து நதி அமைப்பின் நதிகள் ஒரு நாடுகளுக்கும் பொதுவானதாக இருந்தன. இதனால், இரு நாடுகளுக்கும் நதிநீர் தொடர்பாக அவ்வப்போது மோதல் வெடித்தது. அதாவது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஓடும் நதிகளின் நீரை கடந்த 1948இல் இந்தியா தடுத்து நிறுத்தியது. இதில் பாதிப்படைந்த பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து, பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு கடந்த 1960ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் ‘சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம்’ போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி அமைப்பில் உள்ள ஆறு முக்கிய நதிகளை இருநாடுகளுக்கும் மேற்கு மற்றும் கிழக்கு நதிகளாக பிரிக்கப்பட்டன. அதில் இந்தியா கிழக்கு நதிகளான சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய மூன்று நதிகளை தாராளமாக பயன்படுத்தலாம் என்றும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மேற்கு நதிகளில் இருந்து மின்சாரம், விவசாயம், உள்நாட்டு பயன்பாடு போன்றவற்றுக்கு பயன்படுத்த இந்தியாவுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, சிந்து நதி நீரில் இருந்து 20% இந்தியாவும், 80% பாகிஸ்தானும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று வரை நதி நீரை பங்கீடு செய்து இரு நாடுகளும் வாழ்ந்து வந்த சூழ்நிலையில், இன்று பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. 965 மற்றும் 1971 போர்களின் போதும், புல்வாமா தாக்குதலின் போதும் மீறப்படாத இந்த ஒப்பந்தம், பஹல்காமில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற இந்த சூழ்நிலையில் இந்தியா தடை போட்டுள்ளது. சிந்து நதிநீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் சுமார் 60 சதவீத பாகிஸ்தானிய மக்கள், இந்த நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த இந்த ஒப்பந்தம், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.