
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை ஆதீனம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மதுரை ஆதீனம் ''வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'நீங்க யாரு' என சொல்லி சொல்லி கொன்றிருக்கிறார்கள். உலக நாடுகள் முழுக்க கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஐநா சபையிலிருந்து பாகிஸ்தானை நீக்கிவிட வேண்டும். உலக நாடுகளில் பாகிஸ்தானை விளையாட அனுமதிக்கவே கூடாது. முக்கியமாக பாரதம் (இந்தியா) பாகிஸ்தான் உடன் விளையாடவே கூடாது. பாகிஸ்தானை ஐநாவில் ஒரு அங்கமாக வைத்திருப்பதை விட்டுவிட்டு அவர்களை நீக்கிவிட வேண்டும்.
உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு எதையுமே அனுப்பக் கூடாது. தீவிரவாதத்தின் அமைப்பே பாகிஸ்தான் தான். பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கக் கூடிய விவகாரம். நமது பிரதமர் வந்துதான் இதை சரி செய்து வருகிறார். இதற்கெல்லாம் மூலக்காரணம் இந்த சைனாக்கார பயலுகதான். சைனாகாரன் தான் ஆயுதங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். கம்யூனிஸ்ட் நாடான சைனாதான் யாரும் இருக்கக்கூடாது என படைகளை அனுப்புகிறார்கள். சைனாவும் பாகிஸ்தானும் நமக்கு எதிரியாகத்தான் செயல்படுகிறார்கள். வன்மையாக இதை கண்டிக்கிறேன்'' என்றார்.