தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து அரசியல் கட்சியினர் தமது தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவருகின்றனர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் நேற்று (23.03.2021) விராலிமலை தொகுதிக்குட்பட்ட கல்குளத்துப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த விஜயபாஸ்கர், “இந்தக் கரோனாவில் ஏழரை கிலோ எடை குறைந்து நிற்கும் விஜயபாஸ்கர், என் மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதை யாராவது யோசித்தாங்களா. எனக்கும் ஷுகர் இருக்கு, பி.பி. இருக்கு; நானும் மாத்திரை சாப்பிட்றன். நான் கரெக்டா மாத்திரை சாப்பிட்டு, கரெக்டா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, மதியம் ஒருமணி நேரம் தூங்கி, வாக்கிங் போறதுனு இருந்தா என் உடம்பும் நல்லா இருந்திருக்குமே. எனக்கும் தலை சுத்தல் வருது, மயக்கம் வருது. ஆனா மனசுக்குள்ள வெறி இருக்கு, எடுத்துக்கிட்ட பொறுப்புல வேலைய ஒழுங்கா செய்யணும். ஏசுநாதர் சிலுவை சுமந்தது மாதிரி, இந்த விராலிமலை தொகுதியை நான் சுமந்துட்டு இருக்கேன்” என்று வாக்கு சேகரிப்பின்போது தழுதழுத்தார் விஜயபாஸ்கர்.