விருதுநகர் வடக்கு மாவட்டம் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் பேருந்தில் மகளிருக்கு இலவசப் பயணம் கொடுத்தோம். இதனால் அரசுக்கு எவ்வளவு கோடி இழப்பு என்பது முக்கியம் இல்லை. இவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள். அரசுக்கு இவ்வளவு நிதி இழப்பு என்பதைப் பார்க்கவில்லை. இத்தனை பேர் பயணம் செய்கிறார்களே, அத்தனை கோடியை மிச்சப்படுத்தி பெண்கள் கையிலே வைத்திருக்கிறார்கள் என்று முதல்வர் சொல்வது பொருளாதார அடிப்படைத் தத்துவம். சொன்னதைச் செய்துள்ள முதல்வரை எதிர்த்துத்தான் இன்று ஊர் ஊராகச் சென்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். பத்திரிகைகளை நான் பார்த்தேன். போராட்டம் நடத்திய தலைவர்கள் எங்குமே பொதுமக்கள் நலனைப் பற்றி பேசவில்லை. பொதுமக்கள் பிரச்சனைக்காகப் பேசவில்லை என்றால், குறைகளைச் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு தலைவருடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களுக்குப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்...’ என்று கம்பன் பாடினானே... ‘கோசலை நாட்டிலே.. ராமன் பிறந்த கோசலை நாட்டிலே.. வள்ளல் இல்லை..’ ஏன் வள்ளல் இல்லை என்றால், அங்கு வறுமை என்பதே இல்லை. ஊரில் இருந்தவர் எல்லாம் செல்வச்செழிப்பாக இருந்தனர். ‘வண்மை இல்லை ஓர்வறுமை இன்மையால்; திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்’ அங்குள்ளவனுக்கு வீரம் இல்லை. ஏனென்றால், அவனுடன் மல்லுக்கட்ட வரும் அளவுக்குப் பெரிய ஆள் இல்லை. கம்பன் சொல்வதைப் போல, உங்களுக்கு இங்கே சரக்கு இல்லை. ஆட்சியைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. எனவேதான் எல்லா இடங்களிலும் ஒன்று கூடி, மக்களுக்காகப் பேசுகிறேன் என்ற போர்வையில், எல்லோரும் சொல்வது இன்று உதயநிதி அவர்களை அமைச்சர் ஆக்கிவிட்டோம் என்று. உங்களுக்கு ஏன்ப்பா..? எங்களுக்கு நாங்கள் ஆக்குகிறோம். இங்குள்ள மக்களுக்காக ஆக்குகிறோம். அவர் அருமையான பணிகளைத் துவங்க உள்ளார்.
தம்பி உதயநிதி அமைச்சர் ஆனதெல்லாம் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. என்ன பிரச்சினை தெரியுமா? நம்மை எதிர்த்து நிற்கும் சக்திகள்; அவர்கள் என்ன போர்வையில் வந்தாலும் சரி; வடக்கத்திய போர்வையில் வந்தாலும் சரி; அல்லது இனத்தின் எதிரிகளாக வந்தாலும் சரி; எதிர்க்கட்சி நண்பர்களாக இருக்கக்கூடிய அதிமுக, பாஜகவாக வந்தாலும் சரி அவர்களையெல்லாம் பார்த்து பயப்படக்கூடிய கட்சி திமுக அல்ல. இன்னும் 25 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கும் என்பதை நம்மைவிட அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். தலைவர் இன்னும் 25 ஆண்டுகள் இந்தக் கட்சியை வழிநடத்திச் செல்வார். அதன்பிறகும் இந்த இயக்கத்தை நடத்திச்செல்ல ஒரு சரியான தளபதியை கட்சி அடையாளம் காட்டி முன்வரிசைக்குக் கொண்டு வந்திருக்கிறதே! அதைப் பார்த்து பொறுக்கமுடியாமல் மட்டுமல்ல.. அதைக் கண்டு அஞ்சி நடுங்கித்தான் போகுமிடங்களில் எல்லாம் உதயநிதி பற்றி பேசுகின்றனர். அன்புள்ள இனிய எதிரிகளே! ஒன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒரு உதயநிதி அல்ல.. ஓராயிரம் உதயநிதி உருவாகி வருவார்கள்” எனப் பேசினார்.