திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க உரை பொதுக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “அன்று பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது ரயிலில் திருச்சிக்கு வருகை தந்தபோது, கீழப்பழுவூர் சின்னச்சாமி இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தி ஒழிக; தமிழ் வாழ்க என்று முழங்கினார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டவர் பக்தவச்சலம். அவருடைய இந்த நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளானவர் தன்னைத் தானே தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயிர் போகும் தறுவாயிலும் இந்தி ஒழிக; தமிழ் வாழ்க என்று முழங்கியவர் சின்னச்சாமி.
எனவே இந்தி ஒழிப்பு என்பது இன்றல்ல என்றோ தொடங்கிய போராட்டம். அதில் நானும் எனது தந்தையும் நேரடியாக எதிர் கொள்ளாவிட்டாலும் எப்போதும் கலைஞரின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்த பேச்சை பலமுறை கேட்டு அவர் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள். இன்று (4ம் தேதி) தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டம், நம்மைச் சுற்றியுள்ள கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகம் போன்ற அனைத்து மாநிலங்களும் கூர்ந்து கவனித்துத் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு இந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது நம்முடைய தமிழக முதல்வர். இவருடைய செயலை, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உற்று நோக்கிப் பார்த்து நம் முதல்வரின் குரலாக எதிரொலித்து வருகின்றனர்.
தற்போது ஆளும் பிரதமர் மோடி ஒரே மொழி, ஒரே இந்தியா எனவும் இந்துக்கள் மட்டும் தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார். இன்னும் சில வருடங்கள் அவர் பிரதமராகத் தொடர்ந்தால்; ஒரே உடை தான் இந்தியா முழுவதும் அணிய வேண்டும் என்று நமக்கும் பைஜாமா உடை மாட்டிவிடுவார்” என்றார்.