Skip to main content

எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்பு  போராட்டம்

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

SBI Su.Venkatesan MP in the bank office. in-house agitation!

 

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தமாக 5008 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் 355 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் அண்மையில் வெளியாகின.

 

அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 15ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தது. பொங்கல் திருநாளான அன்று முதன்மைத் தேர்வை அறிவித்துள்ளதற்குத் தேர்வர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில், ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வை பொங்கல் அன்று நடத்தாமல் மாற்றுத் தேதியில் நடத்த வலியுறுத்தி பாரத ஸ்டேட் பாங்கு(எஸ்பிஐ) சென்னை வட்டாரத் தலைமையகத்தை சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

 

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி சு. வெங்கடேசன், சி.பி.எம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, வட சென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த வங்கி அலுவலக அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள், தேர்வு தேதி தள்ளி வைப்பது குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாகத் தெரிவித்தனர். ஆனால், எம்.பி. சு.வெங்கடேசன் உட்பட பேச்சுவார்த்தைக்குச் சென்ற சி.பி.எம். கட்சியினர் தற்போதே பேசி முடிவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், “தேர்வைத் தள்ளி வைக்கும் உத்தரவு வரும் வரை நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்” என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்