பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என சீமான் சொன்னால் அதனை வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கலைஞர் நினைவாக கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லாத பொழுது 81 கோடியில் பேனா சின்னம் தேவையா? அப்படி பேனா சின்னம் வைத்தால் அண்ணா அறிவாலயத்திலேயே அல்லது வேறு இடத்திலோ வைத்துக் கொள்ளுங்கள். மீறி கடலில் வைத்தால் உடைப்பேன்' எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, இதுகுறித்த கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “பேனாவை உடைத்தால் எங்கள் கை பூப்பறித்துக் கொண்டிருக்குமா?” எனப் பேசி இருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் மீண்டும் அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “அமைச்சர்கள் பொதுவெளியில் மிரட்டும் தொனியில் பேசுவதாக புகார்கள் எழுகிறதே?” என்ற கேள்விக்கு, “பேனாவை வைத்தால் உடைப்பேன் என்று சொன்னால் எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? நாங்கள் கம்முனு இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள? அவர் உடைக்கட்டும். அதை வரவேற்கிறோம் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? நீங்கள் கேட்கிற கேள்வியே அர்த்தமற்ற கேள்வி. அவர் அப்படி சொல்வார் அதற்கு நாங்கள் பதில் சொல்லாமல் கம்முனு இருக்க வேண்டுமா? அவர் உடைப்பேன் என்பது மிரட்டல் இல்லையாம். எங்கள் கைகள் பூப்பறிக்குமா எனச் சொல்வது தான் மிரட்டலா? எந்த வார்த்தை மென்மையானது, எந்த வார்த்தை கடுமையானது என்று உணராமல் கேள்விகளை எழுப்புவது நாகரீகமற்ற செயல்'' என்று காட்டமாகப் பதிலளித்தார்.