அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ நடைப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி இந்த நடைப்பயணத்தின் முதல் இரண்டு கட்டங்களாக மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை எனப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறைவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக அவர் 100வது தொகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று முன்தினம் (07-11-23) நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
அதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் பா.ஜ.க கட்சி ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறது. கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய அந்த சிலையை பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு முன்பும் அகற்றி காட்டுவோம். அவை அகற்றி தமிழ் புலவர்களின் சிலைகளும், சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகளும் வைக்கப்படும்.
சனாதனம் ஒழிய தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் காரணமாக இருப்பதை கடந்த 70 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைச்சகமே இருக்காது. இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல் நாளாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு நேற்று (08-11-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒருசேர இருக்கும் நாடு, இந்த நாடு. இந்த நாட்டில் பெரியார் கொள்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே தவிர ஆட்சி அதிகாரத்தில் வர முடியாது.
மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண வேண்டும் என்று துடிப்பவர்களால், இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை. எனவே தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து என்று அறைகூவல் இடுகிறார்கள். அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அதன் பிறகு சித்தப்பாவா? என்பதை முடிவு செய்யலாம்” என்று கூறினார்.